Wednesday, August 29, 2012

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?


இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள். இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும்(7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான். எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை.

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை! அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்! அப்போது,

والشعرآء يتبعهم الغاون، الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள். திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும்(26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ். ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான். இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும். தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள். அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

இதன் தமிழ்க் கவியாக்கம்:

        கற்கள் சுமக்கும் இச்சுமையோ
                  கைபர்ச் சந்தைச் சுமையன்று
        பொற்புள தூய நன்மையினைப்
                   பொழியும் இறையின் சுமையாகும்.

       இறைவா! எமது கூலியதோ
                 இறவா மறுமைக் கூலியதே
       நிறைவாய் மக்கா மதீனாவின்
                நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்! கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது! அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

إصبع دميت هل أنت إلا
و في سبيل الله ما لقيت

இதன் தமிழ்க் கவியாக்கம்:

செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم لا عيش إلا عيش الآخرة
فاغفر للأنصار و المهاجرة

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

இறைவா! உண்மை வாழ்வதுவோ
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர் களைநீ மன்னிப்பாய்!

கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
                                                                                                                    அதிரை அஹ்மது
 
இறைதூதர் கவிதைகளுக்கு அன்புடன் புகாரியின் விமரிசனம்
 

அன்பிற்கினிய மூத்தசகோதரர் அதிரை அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைத்தூதரின் கவிதைகளை மொழிமாற்றி இட்டிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது.

>>>>>>
கற்கள் சுமக்கும் இச்சுமையோ
கைபர்ச் சந்தைச் சுமையன்று
பொற்புள தூய நன்மையினைப்
பொழியும் இறையின் சுமையாகும்.
>>>>>>

கற்களையா உன் தோள்கள் சுமக்கின்றன; இறையின் அளவற்ற அருளையல்லவா சுகமாய்ச் சுமக்கின்றன!

அடடா எத்தனை அழகு. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். அங்கே மருந்தும் தேனும் சம அளவில் இருக்கும் அல்லது தேன் சற்று கூடுதால் இருக்கும்.

ஆனால் இக்கவிதையிலோ குடம் குடமாய்த் தேன் கவிழ்ந்து அப்படியே கொட்டிக்கொண்டே இருக்கிறது வெறும் சுண்டைக்காய் அளவு சுமைக்காக. இக்கவிதையைக் கேட்டபின் அந்தச் சுமையைச் சுமக்கத்தான் எத்தனை புத்துணர்ச்சி உற்சாகப் பெறுக்கெடுக்கும்.

கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். பொய் என்பது உண்மையில் பொய்யல்ல அலங்காரம். கண் என்ற உண்மைக்கு மை என்பது அலங்காரம். கவிதை என்ற உண்மைக்கு கற்பனை என்பது அலங்காரம்.

உண்மைக்கு அலங்காரம் செய்ய வந்த ஒரு கற்பனை நயமே இன்னொரு பெரும் உண்மையாகிறது இக்கவிதையில் மட்டும்தான். ஆகவே இது உண்மையிலேயே தனித்துவமான கவிதை. கவிதைகளையெல்லாம் வென்றெடுத்த கவிதை என்பேன்.

எப்படி எனில்....

ஒரு சாதாரண கவிஞன் ”நீ சுமப்பது கல்லல்ல இறைவனின் அருள்” என்று கூறியிருந்தால், அட எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறான் கவிஞன் என்று பாராட்டுவோம். இறைவனின் அருளைச் சுமப்பதாய் நினைத்து நாம் கற்களைச் சுமப்போம் வாருங்கள் என்று அனைவரையும் அழைப்போம்.

ஆனால் அதையே இறைத்தூதர் சொன்னால் என்னவென்று பொருளாகும்?

கல் என்பது அருளுக்குச் சமம் என்ற நிலை மாறி அது இறைவனின் அருளேதான் என்று ஆகிவிடுமல்லவா? ஏனெனில் சொல்லுவது ரசூல் அல்லவா?

கவிதைக்கு அலங்காரமாய் வந்த கற்பனையே அது வெறும் கற்பனை அல்ல, உண்மை என்று ஆன ஒரே கவிதை இது மட்டும்தான் என்பேன்.
 
>>>>>>
செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
>>>>>>

இது நாயகத்தின் கவிதை என்று எனக்கு முதன் முதலில் சில ஆண்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தவர் நாகூர் ரூமி என்னும் முகமது ரஃபி. நான் படித்த ஜமால் முகமது கல்லூரியில் எனக்கு மூத்தவர். இன்று ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் கவிஞர். அவரின் மொழியாக்கம் இப்படி இருந்தது.

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான்
ஆனால் இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

எந்த ஓர் இன்னல் வந்த போதும் சட்டென்று இறைவனை நினைத்து எளிதாக ஆக்கிக்கொள்ளும் ஈமான் நிறைந்த உள்ளம்தான் இறைதூதரின் கவிதைகளில் அப்பட்டமாய் வெளிப்படுகின்றது.

அந்தப் பொதுத்தன்மையே இறைதூதரின் கவிதைகளில் முதன்மை என்று நான் காண்கிறேன்.

குறைசிகளின் பெருங் கொடிய இன்னல்களுக்கு மட்டுமல்ல, கல் சுமப்பது, விரலில் வழியும் ரத்தம் போன்ற சின்னச் சின்ன இன்னல்களுக்கும்கூட இறைதூதர் இறைவனின் அருளையே பற்றிப் பிடித்து வெற்றி கொள்கிறார்.

இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மிக நல்ல பாடம்.

நான் இறைதூதரின் கவிதைகளுக்கும் விமரிசனம் எழுதுவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. இன்று எனக்கு அந்த வாய்ப்பினைத் தந்த அன்பு ஆய்வாளர் உங்களுக்கு எத்தனை நன்றிகளை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை!
 
>>>>>>
கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
>>>>>>>

இந்த அருமைத் தொடருக்கு இந்த முத்தாய்ப்பு வரிகள் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நான் முன்பே உங்கள் தொடரின் பகுதிகளில் சொன்னதுபோல், நீண்டகாலம் ஓர் நல்ல ஆய்வுக்காகக் காத்திருந்தேன்.

நான் முதன் முதலில் இது தொடர்பாக தமிழில் வாசித்த கட்டுரை பேராசிரியர் நாகூர் ரூமியினுடையது. அதுவும் அருமையானதுதான். ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஏற்றதாக இருந்தது. அர அல போன்றவர்களுக்கு அல்ல.

நாகூர் ரூமியின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் காண்க:
http://anbudanislam2012.blogspot.ca/2012/07/blog-post_9653.html

’வஹீ என்ற உயர் இலக்கியத் திறன்’ என்ற சொற்றொடரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆம் அது ஓர் உயர் இலக்கியத் திறனேதான். அதை நல்ல கவிஞர்களால்தான் எளிதாகவும் சரியாகவும் அணுகமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து.

மிகப் பெரும் கவிஞர்களாலேயே சூழப்பெற்ற அரபு மண்ணில் அவர்களையெல்லாம் அதிசயிக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கும் உயர் கவிதை நடையில் குர்-ஆன் இறங்குவதுதானே மிகவும் பொருத்தமானது. இறைவன் என்ன அறியாதவனா? இது போல் ஓர் வரியையாவது இவர்கள் எழுதுவார்களா என்ற சவால்கூட திருமறையில் உள்ளதல்லவா?

இஸ்லாம் வாளால் தோன்றிய மதம் என்பார்கள்
அது உண்மை அல்ல
இஸ்லாம் கவிதையால் யாக்கப்பட்ட மார்க்கம் என்றால்
அதை நாம் தாராளமாக நம்பலாம்
 
>>>>ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!<<<<<

ஆமாம், குறைசிகளின் இனத்தில் பிறந்த அண்ணல் நபிக்கு 90 விழுக்காட்டிற்கும்மேல் எதிர்ப்பினைக் கொடுத்தவர்கள் குறைசிகள்தாம். குறைசிகளின் எதிர்ப்பு தீராத ஒன்றாகவே இறுதிவரை இருந்தது.

நாயகம் 40 வயதில் நபித்துவம் அடைகிறார். இஸ்லாம் பல வெற்றிகளை எட்டியபின்னரும்கூட தன் 52வது வயதில் அதாவது 12 வருடங்கள் ஆகியும் தீராத பகையை குறைசியர் கொடுக்க மதினாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். அத்தனை கொடுமைக்காரர்கள் குறைசியர்.

அவர்கள் கைகளிலும் கவிதைகளா எனும்போது எனக்கு மட்டுமல்ல அந்தக் கவிதைகளுக்கும் நிச்சயம் உயிர்போக வலித்திருக்கும்.

நெருப்பு எவர் கைக்கும் வரும்தான். ஆனால் கொள்ளிக்கட்டைகளை எப்படி சுடர் விளக்குகளால் விரட்டி வாழ்வை ஒளிமிகுந்ததாய் ஆக்கமுடியும் என்பதற்கு இஸ்லாமியக் கவிதைகள் சிறந்த நல் உதாரணங்களாய் அமைந்துள்ளன.

அக்கவிதைகளுள் சிலவற்றைத் தொகுத்து மொழிமாற்றி இத் தொடர் முழுவதும் தோரணங்களாய்க் கட்டி கம்பீரமாய் தொங்கவிட்ட உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

குறைசியர் கவிதைகளுக்கும் இஸ்லாமியர் கவிதைகளுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தம் முழுவதையும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். புல்லரிக்கிறது.

அன்புடன் புகாரி

 

No comments:

Post a Comment